திமுகவின் அனைத்து ஊழலையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்: மோடி உறுதி

திமுகவின் அனைத்து ஊழலையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்: மோடி உறுதி
Updated on
2 min read

“திமுக செய்துள்ள அனைத்து ஊழலையும் நாங்கள் விசாரித்து கடும் நடவடிக்கை எடுப்போம்” என கோவை பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 21 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: புத்தாண்டு என்ற புதிய நம்பிக்கையின் தொடக்கத்தில், தமிழக மக்கள் என்டிஏ-வின் வெற்றி, திமுக-வின் வெளியேற்றம் என்ற செய்தியை அளிக்கின்றனர். 2023-ம் ஆண்டிலேயே, நாம் பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றினோம். கடந்த 16-ம் தேதி, நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல் செய்யும் வரலாற்றுபூர்வமான படியை நாம் எடுத்து வைத்தோம்.

எனக்கு சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த சகோதரிகள் நாடாளுமன்ற, சட்டப்பேரவைக்கு அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்பது மட்டுமே ஆசை. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த உயர்வான முயற்சி தோல்வியடைந்தது. திமுக, காங்கிரஸ், அவர்களது கூட்டணிக் கட்சியினர் கூட்டாக இணைந்து, அவர்களின் வெறுப்பரசியலுக்கு, கீழ்தரமான அரசியலுக்கு அதை இரையாக்கினர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டுக்கு அதிக இருக்கைகள் கிடைத்திருக்கும். ஆனால், தெளிவாக திமுக இதை விரும்பவில்லை. இப்போது திமுக-வின் செயல்பாடுகள் தெளிவாக அம்பலமாகிவிட்டது. அவர்களின் குட்டு வெளிப்பட்டு விட்டது. கருப்பு உடை அணிந்து திமுக தங்களது தீய எண்ணங்களை திரை போட முடியாது.

உங்கள் திட்டத்துக்கான செயல்களின் பலன்களில் இருந்து நீங்கள் தப்ப முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகங்களை தெரிந்து கொண்டு விட்டார்கள். பொய்கள் பேசும் திமுக-வின் புனை, புரட்டுகளை மறைக்க முடியாது. இது எங்களின் போராட்டத்தின் முடிவு அல்ல; தொடக்கம் தான்.

இன்று பெருமையாகச் சொல்லிக் கொள்ள திமுக-விடம் எந்த சாதனைகளும் கிடையாது. அதனால், தமிழ்நாட்டின் இருக்கைகள் குறைப்பு பற்றி பொய்யான தகவல்களை பரப்பத் தொடங்கியுள்ளனர். இன்று தமிழ்நாட்டில் பெண்கள், சிறு குழந்தைகள் ஆகியோர் குற்றவாளிகளால் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். வன்முறை மற்றும் குற்றங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் பெண்களுக்கு திமுக தீங்கு இழைக்கிறது.

நாடாளுமன்றத்தில் கூட இவர்கள் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை. பெண்களுக்கு எதிரான எண்ணப்பாட்டுக்கு திமுக-வுக்கு சரியான பதில் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உச்சபட்ச குடும்பம் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். மக்கள் மீது இருக்கும் கடன் மேலும் மேலும் கூடி வருகிறது.

திமுக-வின் கொள்கை என்பது குடும்பத்துக்கு, குடும்பத்தால், குடும்பத்துக்காக அவ்வளவு தான். முதல்வர், துணை முதல்வர், எம்பி-க்கள் ஒரு குடும்பத்தினரே உள்ளனர். திரைப்படத்துறை, ஊடகத்துறை என அனைத்துத் துறைகளையும் தங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இங்கு ஒரு குடும்பத்துக்குள் மகனுக்கும், மருமகனுக்கும் இடையே யார் அதிகமாக கொள்ளையடிக்கிறார்கள் என்ற போட்டி நடக்கிறது. திமுக-வுக்கும், டில்லியில் உள்ள அவர்களது கூட்டாளிக்கும் இடையே ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது.

இந்த இரு குடும்பங்களின் ஊழலால் மக்கள் பெரும் வேதனையில் உள்ளனர். பாஜக கோவை மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத் தலைவராக்கியுள்ளது. திமுக-வின் ஊழல் மலிந்த ரவுடியிச அரசியலை கோவை மக்கள் எப்போதும் புறக்கணித்தே வந்துள்ளனர். டாஸ்மாக் ஊழல் போன்ற பெரிய மோசடிக்கு பெயர் போன அரசியல்வாதியை அவர்கள் இங்கே அனுப்பியுள்ளனர்.

கோவை கூட்டம் வாயிலாக நான் மக்களுக்கு இரண்டு கேரண்டிகளை தருகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் - ஒழுங்கை சீர்செய்வோம். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். நில அபகரிப்பு மாஃபியா, மணல் மாஃபியா, மதுபான மாஃபியா ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம். போதைப் பொருள் புழக்கம் இல்லாத தமிழ்நாடு உருவாக்குவோம். திமுக-வின் இடமாற்றத்துக்கான பணம் பெறுதல், பணம் மோசடி, ஊழல்கள் ஆகியவற்றுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம். திமுக செய்துள்ள அனைத்து ஊழல்களையும் நாங்கள் விசாரித்து கடும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுகவின் அனைத்து ஊழலையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்: மோடி உறுதி
தொகுதி மறுவரையறையை 2051 வரை தள்ளி வைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in