

சென்னை: தொகுதி மறுவரையறை செய்வதை 2051-ம் ஆண்டு வரை தள்ளிவைக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி பெற்றதை முன்னிட்டு இண்டியா கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட காணொலியில் பேசியதாவது: தொகுதி மறுவரையறை எனும் கருப்பு சட்டத்துக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆபத்தை ஓராண்டுக்கு முன்பே மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, ஏப்ரல் 17-ல் கருப்புக் கொடி ஏற்றி, மசோதா நகலை கொளுத்தினேன்.
அதன் வெற்றிக்கான வெடியை திண்டுக்கல்லில் கொளுத்தினேன். தீ பரவட்டும் என்று சொன்னேன். அது நாடாளுமன்றம் வரை பற்றிக் கொண்டது. பழைய திமுகவை பார்க்க வேண்டி வரும் என்று எச்சரித்தேன். அப்படி என்றால் என்ன என்று கேட்டவர்களுக்கு, இதுதான் திமுக என அழுத்தமாக காட்டியிருக்கிறோம்.
அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்றதால், இது சாத்தியமாகிஇருக்கிறது. வடக்கு, தெற்கு என நமக்குள்ளே பிளவை ஏற்படுத்தி, சண்டை போட வைக்கலாம் என நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டியடி கிடைத்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா தோல்வி அடைந்திருக்கிறது. இது பாஜக இனி நாடு முழுக்கப் பெறப்போகும் தோல்விகளுக்கான தொடக்கமாகும்.
இதற்கு உறுதுணையாக இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள செயல் தலைவர் தேஜஸ்வி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றியே.
2001-ம் ஆண்டில் செய்தது போன்றே தற்போதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051 வரை, தொகுதி எண்ணிக்கையை மறுவரையறை செய்வதைத் தள்ளிவைக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். பெண்களின் இடஒதுக்கீட்டுக்காக 2023-ம் ஆண்டே நாம் ஆதரித்து நிறைவேற்றிய சட்டத்தை உடனே இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் முழு வெற்றியாக அமையும். அதற்காகப் போராடுவோம்.
இந்த தொகுதி மறுவரையறைச் சட்டம், தமிழகத்தின் துரோகிகள் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. அப்படி துரோகம் செய்த பழனிசாமிக்கு தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்துள்ளது. தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் தேர்தலில் மறக்கவே முடியாத மாபெரும் தோல்வியை கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.