ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி, ராகுல் தமிழகம் வருகை

ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி, ராகுல் தமிழகம் வருகை
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் தமிழகம் வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது இந்தக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி ஜன.28-ம் தேதி தமிழகம் வருகிறார்.

கன்னியாகுமரியில் பாஜக சார் பில் நடைபெற உள்ள ‘தாமரை மகளிர் மாநாட்டில்’ பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஜன.28-ம் தேதி பிரதமர் வருவதற்கு முன்பாகவே தொகுதிப் பங்கீடு முடிவடையும் என்று தெரிகிறது.

ராகுல் காந்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜனவரி மாத இறுதியில் தமிழகம் வருகிறார். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு முதல்வர் ஸ்டாலினுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸில் ‘அதிக இடம், ஆட்சியில் பங்கு’ என்ற கோஷம் வலுப்பெற்று வருகிறது. இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

என்டிஏ கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் தமிழகத்துக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதேபோல், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் வகையில், கிராம கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டை இம்மாத இறுதியில் நடத்த மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஜன.28 அல்லது 29-ம் தேதியில் ராகுல் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி, ராகுல் தமிழகம் வருகை
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6.5 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in