

மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குவிந்திருந்த பொதுமக்கள்.(கோப்புப் படம்)
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்றன. அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் தலைமை தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து சதி செய்கிறது. வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடுகிறது என்று சரமாரியாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முந்தைய தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக கூறி ஆவணங்களை வெளியிட்டார்.
அவற்றை எல்லாம் தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. அத்துடன், வாக்கு திருட்டு தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ராகுல் காந்தி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், 2-ம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின. பிஹாரை போலவே 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருத்தப் பணிகளின் போது வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத மாக குடியேறியவர்களை நீக்கு வதற்கு கவனம் செலுத்தப் பட்டது.
44.40 கோடி வாக்காளர்கள்: இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் தொடங்குவதற்கு முன்பு மொத்தம் 50.90 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில் தனித்தனி வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 44.40 கோடியாக குறைந்துள்ளது. வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் ‘ASD’ (absent, shifted and dead/duplicate) அதாவது வராதவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்கள் / இரட்டை பதிவுகள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு படிவங்கள் மிகவும் குறைவாகவே திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். உ.பி.யில் மொத்தம் 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இம்மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2.89 கோடி வாக்காளர்கள், அதாவது 18.70 சதவீதம் பேர், இறப்பு, நிரந்தர இடப்பெயர்வு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவு காரணமாக நீக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அசாமில் தனியாக எஸ்ஐஆர் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ்: மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் தொடர்பாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அமர்த்தியா சென் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் சாந்திநிகேதன், போல்ப்பூரில் உள்ள அவரது மூதாதையர் இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் ஜனவரி 16-ம் தேதி அவர் தனது இல்லத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு .தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புப் படிவத்தில் அமர்த்தியா சென் மற்றும் அவரது தாயாருக்கு இடையிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்துள்ளது. இந்த முரண்பாடு காரணமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி, அவரது சகோதரர் முகமது கைஃப் ஆகியோருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமர்த்தியா சென் போன்ற பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது "வங்காள மக்களை அவமதிப்பதற்குச் சமம்" என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.