

சென்னை: குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குதிரை பேரம் நடத்தியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரமேஷ் என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் “இந்த வழக்கை மாநில போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனக் கூறி விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என ரமேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் மனுதாரரை சம்பந்தம் இல்லாமல் இந்த வழக்கில் கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளதாக குறிப்பிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் தொலைபேசியில் பேசினார் என்பதற்காக மனுதாரருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில காவல்துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். எந்தவித வாரண்டும் இல்லாமல் மனுதாரர் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், ஒரு லட்சத்து மூன்று ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்” என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த குற்றச் சதியில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது. இதுவரை இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொய் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என்று கேட்டுக் கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நான்கு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் ரமேஷுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.