

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க வாய்ப்பில்லாத நிலையில், பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இருப்பதாக திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சுமார் 1 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு இயங்கி வந்த கர்நாடக அரசு மற்றும் தனியார் தமிழ்ப் பள்ளிகள் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, தமிழ் மொழி மீதான ஒவ்வாமை, தமிழ் கற்பதில் ஆர்வக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர்களுக்கு தாய் மொழி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வி அளவில், பெங்களூருவில் உள்ள பல்கலைக் கழகங்களில் இரண்டாம் மொழியாக தமிழ் கற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க இயலாது. ஏனென்றால் பெங்களூருவில் எந்த பல்கலைக் கழகத்திலும் தமிழ்த் துறை இல்லை. காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அதன் துணை வேந்தர் விக்டர் லோபோ ஒப்புதல் அளித்துள்ளார்.
திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.குமார்
இதுகுறித்து திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் “இந்து தமிழ் திசை” செய்தியாளரிடம் கூறியதாவது: “எங்களுடைய அமைப்பின் சார்பில் கடந்த 5ம் தேதி செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு நடத்தினோம். அம்மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும், இந்த பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினோம்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் விக்டர் லோபோவை சந்தித்து பேசினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு கடிதம் எழுதப் போவதாக உறுதியளித்தார். அதேபோல செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும் ஒப்புதல் அளித்தார்.
தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான முடிவை பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழுவின் முன்வைத்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்று முறைப்படி தமிழ் இருக்கை அமைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் கர்நாடகாவில் முதல் முறையாக பல்கலைக் கழகம் ஒன்றில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.
செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகம் தமிழ் இருக்கை அமைக்கும் பணிகளுக்கு எனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம் அளிக்க இருக்கிறேன். இந்த இருக்கை அமைந்தால் கர்நாடகாவை சேர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழர்களும் பயனடைவார்கள்.” இவ்வாறு எஸ்.டி.குமார் கூறினார்.