

சென்னை: அரசு நிகழ்ச்சிகளி்ல் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்து நிர்வாக உத்தரவு பிறப்பிக்குமாறு தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் 8 வார காலத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக அரசு பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, விழா முடிவில் தேசிய கீதம் பாடப்படுவதே மரபாக இருந்து வருகிறது. ஆனால், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழர்களின் உணர்வு, அடையாளம், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கடைசியாக பாடுவது நமது மரபை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது. எனவே, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாக ரீதியிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
வந்தே மாதரம், தேசிய கீதம்: அத்துடன், ‘வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடியே அரசு நிகழ்வுகளைத் தொடங்க வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன.28-ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 8 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.