

நியூயார்க்: உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. வர்த்தகத் தொடக்கத்திலேயே இப்பங்கின் மதிப்பு 21 சதவீதத்திற்கும் மேல் எகிறியதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 1 டிரில்லியன் டாலர் (ரூ.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பை எட்டிய முதல் ‘டிரில்லியன் அதிபர்’ என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடாக கருதப்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் ஆரம்ப விலை $135 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சந்தையில் நிலவிய அசாத்திய வரவேற்பு காரணமாக, வர்த்தகத் தொடக்கத்திலேயே 11 சதவீத பிரீமியத்துடன் $150 என்ற விலையில் பங்குகள் விற்பனையாகத் தொடங்கின. முன்கணிப்புகள் சிலவற்றில் இதன் ஆரம்ப விலை $170 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், தொடக்கத்தில் சற்றே குறைவாகத் தோன்றினாலும், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பங்குகளை வாங்கிக் குவித்தனர். இதனால், வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் மதிப்பு உச்சகட்டமாக $168.75 வரை தொட்டது.
இந்த பட்டியலிடலின் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பொதுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலேயே ஆறாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் வணிகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு நிறுவனத்தில், சாமானிய முதலீட்டாளர்களும் நேரடியாகப் பங்குகளை வாங்க இந்த ஐபிஓ வழிவகுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மிகப்பெரிய ‘மெகா கேப்’ ஐபிஓ-வாக ஸ்பேஸ்எக்ஸ் அமைந்துள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான ஓபன் ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் விரைவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.