பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகை: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு முடிவாக வாய்ப்பு

பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகை: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு முடிவாக வாய்ப்பு
Updated on
1 min read

அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒருபுறம் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இதற்குப் போட்டியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்கான நகர்வுகள் தற்போது வேகமெடுத்துள்ளன. அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி ஓராண்டுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட நிலையில், பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இந்தக் கூட்டணியில் கைகோத்துள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ள போதிலும், அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஏற்கெனவே இருமுறை சென்னைக்கு வருகை தந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தினார். கூட்டணி கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இருப்பினும், பாஜக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதிமுக ஒதுக்க முன்வந்த இடங்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. குறிப்பாக, பாஜக தரப்பில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, பாஜக-வுக்கு சுமார் 30 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. அதே சமயம், தனது கூட்டணி கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில் பாஜக கூடுதல் இடங்களை வலியுறுத்தி வருகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைக் குறிவைத்து பாஜக களம் இறங்கியுள்ளது. இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். அவர் பழனிசாமியைச் சந்தித்து இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன் பிறகு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, உடன்படிக்கை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகை: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு முடிவாக வாய்ப்பு
இறங்கி வந்தது இந்திய கம்யூனிஸ்ட்: திட்டப்படி 5 தொகுதிகளை ஒதுக்கியது திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in