

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “தொகுதி பங்கீட்டில் திமுக எங்களை நிர்பந்திக்கவில்லை” என விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுக-வுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேக-வுக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை வழங்குமாறு திமுக-விடம் வலியுறுத்தி வந்தன.
ஆனால், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வருகையால், கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து ஒன்றை குறைத்து 5 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமாறு திமுக கூறியது. இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து முடிவெடுக்க மாநிலக் குழு, செயற்குழுவை கூட்டி விவாதித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதனடிப்படையில் திமுக-வுடனான 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நேற்று சென்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் 5 தொகுதிகளுக்கான, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது:
“பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால், நாங்கள் உட்பட எல்லோரும் குறைத்துக் கொள்கிறோம். நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்” என முதல்வர் கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட திமுக-வுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறது. இதை பின்னடைவாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.