

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை பாஜக தேசிய தலைமை ஏற்கெனவே நியமித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்திருந்த பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது இறுதி முடிவுகளை எடுக்க அவர் தமிழகம் வருகிறார்.
அந்தவகையில், மூன்று நாள் பயணமாக நாளை (ஜன.21) பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். இந்த பயணத்தில் பாமக, தமாகா மற்றும் பிற தோழமைக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதே இவரது வருகையின் முதன்மை நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், வரும் ஜன.23-ம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுப் பேசுகிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரத்தின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் பொதுக்கூட்ட மேடையில், பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்து, பலத்தைக் காட்ட பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளார். இதற்காக விழா ஏற்பாடுகளை அவர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
அதேநேரத்தில், பிரதமர் வருகைக்கு முன்னதாக வரும் 22-ம் தேதி கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக அரசுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதோடு, பாஜக தலைமையிலான கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த வருகை அமையும் என்றும், தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவுக்கு வருவது, தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு கூடுதல் தெம்பைக் கொடுக்கும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் ஆலோசனை: தமிழக பாஜக தலைவர்களுடன் பியூஷ் கோயல் நேற்று மாலை டெல்லியில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம், தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழக வருகை ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.