

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.
இந்நிலையில், பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று வருகிறார். காலை 10 மணிக்கு சென்னை வரும் அவர், தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பகல் 11 மணி முதல் 12 மணி வரை கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், பகல் 1 மணி முதல் 2 மணி வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.45 மணி வரை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பியூஷ் கோயல் சந்தித்து பேசும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2 மணி முதல் 3 மணிக்குள் பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்துக்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, பியூஷ் கோயல் சந்திக்க இருப்பதாகவும், அங்கு பியூஷ் கோயலுக்கு மதிய விருந்தை பழனிசாமி அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பியூஷ் கோயல் சந்தித்து பேச இருக்கிறார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.