

பியூஷ் கோயல்|கோப்புப் படம்
ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் ஏறக்கூடத் தயாராக இல்லை, அவர்களுக்குள் நடக்கும் சண்டை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் 2023-ல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது.
மக்களவை இடங்களை அதிகரித்து, அதில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 272 முதல் 273 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸின் சுயநல அரசியலால் இந்தத் திருத்தங்களை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.
ஸ்டாலின் குடும்பமும் திமுக-வும் பெண்களுக்கு இந்த உரிமை கிடைக்காமல் தடுத்ததை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகிறார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழக பெண்கள் மறக்கமாட்டார்கள். ஸ்டாலின் ஒரு பொய்யர். பொய்யான தகவல்களைப் பரப்புவதற்காக அவர் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழகத்தை கைப்பற்றப் பார்ப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். முதலில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே மேடையில் ஏறக்கூடத் தயாராக இல்லை. அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க மட்டுமே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார். தமிழ் கலாசாரத்தையும், சனாதன தர்மத்தையும் மதிக்கத் தெரியாத உதயநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.