

ஓசூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
தொகுதி மறுவரையறையை ஸ்டாலின் எதிர்த்தபோது நாடு எச்சரிக்கை அடைந்தது. நாடு காப்பாற்றப்படவே ஸ்டாலின் இதைச் செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
ஓசூரில் நடந்த திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கன்னடத்தில் பேசினார். அவர் பேசியதாவது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்மானத்திற்காகப் போராடக் கூடியவர். காங்கிரஸ், திமுக மகளிருக்கு எதிரான கட்சிகள் இல்லை, சமூகநீதி, ஜனநாயகத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நாங்கள். தொகுதி மறுவரையறையைத்தான் நாங்கள் எதிர்த்தோம், மகளிர் இடஒதுக்கீட்டை அல்ல.
இவர்களின் நோக்கம் தமிழகம், மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளை வெல்ல பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். மணிப்பூரில் நடந்த கலவரங்களின்போது எங்கே சென்றீர்கள்? விமானத்தில் சுற்றி வந்தீர்கள். பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்பவர் அல்ல.
ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். ஆனால், மோடி தியானம், பூஜை உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இவற்றால் பலன் இல்லை. ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்த்தபோது நாடு எச்சரிக்கை அடைந்தது. நாடு காப்பாற்றப்பட ஸ்டாலின் இதைச் செய்தார். வேறு எந்த காரணமும் இல்லை.
நாடு இன்று வளர்ந்துள்ளது என்றால் தென்னிந்தியாவின் மூலமாகவே இருக்க முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது. வாக்குறுதிகள் அளிப்பது மட்டுமல்ல; அவற்றை நிறைவேற்றியும் காட்டியுள்ளது திமுக. அனைவரும் ஒற்றுமையுடன் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியாக ஸ்டாலின் தலைமையில் போராடி வருகிறோம்.
ஸ்டாலின் தனி ஒருவராக போராடவில்லை. அவருக்குப் பின்னால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஸ்டாலினுக்கு நாடே ஆதரவு அளித்து வருகிறது. 12 ஆண்டுகளில் மோடிக்கு இது முதல் தோல்வி; இனி அனைத்திலும் தோல்வியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.