

திமுக அரசை கண்டித்து வெள்ளை அறிக்கையை பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் அகர்வால், தமிழக பாஜக வல்லுநர்கள் பிரிவு மாநில அமைப்பாளர் சுந்தரராமன் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் நேற்று வெளியிட்டனர். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழகத்தில் வலுவான தொழில் துறை, கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள், நிறைய வளங்கள் இருந்தும் அரசு கஜானா மட்டும் காலியாக இருப்பது ஏன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழக அரசின் நிதி நெருக்கடி’ குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சரும், பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வலுவான தொழில் துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடுமையாக உழைக்கும் விவசாயிகள், மீனவர்கள், திறமையான இளைஞர்களைக் கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். இங்கு அனைவரும் பாடுபட்டு உழைக்கின்றனர், வளங்களை உருவாக்குகின்றனர். ஆனால், அரசின் கஜானா மட்டும் காலியாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினிடம் ஒரே ஒரு கேள்வி.
இந்த பணமெல்லாம் எங்கே போனது? தமிழக அரசின் கடன் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது விரைவில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும் என்கின்றனர். இதுதவிர, மின்வாரியம் போன்ற பொதுத் துறை நிறு வனங்களுக்கு மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கெல்லாம் ஸ்டாலினிடம் பதில் இல்லை. அவர் போலித் தரவுகளைக் கூறி மக்களின் கவனத்தை திசைதிருப்ப பார்க்கிறார்.
இன்று தமிழக அரசு என்பது ‘ஸ்டாலின் குடும்பத்தின் ஏடிஎம் மெஷின்’ போல செயல்படுகிறது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சபரீசன் என அந்த குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கையிலும் இந்த ஊழல் மற்றும் கொள்ளையின் கறை படிந்திருக்கிறது. திமுகவின் நிர்வாகத் திறமையின்மை, ஊழலால் திவால் நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடாக மட்டும் தமிழகத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு 7 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, இப்போது ஜிஎஸ்டியால் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அந்த பணமெல்லாம் எங்கே போனது? தமிழக அரசு ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. டாஸ்மாக் ஊழல் முதல் போதைப் பொருள் புழக்கம் வரை அனைத்துக்கும் ஸ்டாலின் குடும்பமே பொறுப்பு. தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இது இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கிறது.
திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. ஆனால், பாஜகவில் அப்படி இல்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் அல்லது நரேந்திர மோடி என யாருடைய குடும்பமும் அரசியலில் இல்லை. பாஜகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்; வாரிசுகளுக்கு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, தேசிய செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ண அகர்வால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.