

அமைச்சர் கமலி
சென்னை: பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.70 லட்சம் செலவில் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கமலி அறிவித்தார்.
தெருவில் உள்ள நாய்களைத் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மூலம் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கமலி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பாக அமைச்சர் கமலி வெளியிட்ட அறிவிப்புகள்:
> செட்டிநாடு, நடுவூர், சின்னசேலம் அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்பு பிரிவுகள் நிறுவப்பட்டு புறக்கடை முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
> பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.70 லட்சம் செலவில் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படும்.
> கோழிப் பண்ணைகளுக்கு நோயை கண்டறிதலும் தொடர் கண்காணிப்பும் அவசியம் என்பதை கருத்தில்கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.30 கோடி செலவில் உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம் (கிரேடு-2) அமைக்கப்படும்.
> திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரூ.34 கோடி செலவில் தினசரி 30 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட நவீன ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.
> சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் அமைந்துள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கிடேரி வளர்ப்பு மையம் ஏற்படுத்தப்படும். இங்கு வளர்க்கப்படும் மாடுகள் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும்.
> தெருவில் உள்ள நாய்களை தத்தெடுக்கும் வகையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மூலம் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். தெருநாய்களை தத்தெடுப்பது ஊக்குவிக்கப்படும்.
> திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.71 லட்சம் செலவில் பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்கப்படும்.
> நீலகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6.60 கோடி செலவில் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து உற்பத்தி செய்யப்படும்.
> கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
> ஓசூர் கோழி வளர்ப்பு உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் மாணவர்களுக்கும், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் மாணவிகளுக்கும் கூடுதல் விடுதி கட்டிடம் கட்டப்படும்.