

சென்னை: அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் உறுதிப்படுத்துகிறது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அவசரமாகத் தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அன்றாடத் தேவைக்கு ஏற்ப வழக்கம் போல எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்களுக்குத் தடையற்ற மற்றும் நம்பகமான எரிபொருளை வழங்க எங்களின் அனைத்து டீலர்களும், எண்ணெய் நிறுவனங்களும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.