

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு தீர்ப்பு நகலை சுப்பிரமணிய சாமி கோயிலில் வைத்து மனுதாரர் வழிபட்டார்.
மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார். இவர், கார்த்திகை தீப திருநாளான நாளை (டிச.3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் எற்றவும், இல்லையெனில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனக்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, இந்தாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் எற்ற வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் வழக்கின் உத்தரவு நகலை மனுதாரர் ராம ரவிக்குமார், அவரது வழக்கறிஞர் அருண் சுவாமி நாதன் ஆகியோர் திருப்பங்குன்றம் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
இது குறித்து வழக்கறிஞர் அருண் சுவாமி நாதன் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவிலிருந்து 15 மீட்டர் அப்பால் உள்ள இடங்களில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்று 1996-ல் தீர்ப்பு இருந்தும், இத்தனை ஆண்டுகளாக தீர்ப்பை அமல்படுத்தாமல் இந்து சமய அறநிலையத்துறை, தேவஸ்தான நிர்வாகம் இருந்து வந்த நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பினை, அருள்மிகு சுப்ரமணியசாமியின் பொற்பாதங்களில் இன்று சமர்ப்பித்தோம். இந்துக்களும் - முஸ்லிம்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை, ஆனால் சிலர் இருவரையும் அரசியல் லாபத்திற்காக பிரித்து வைத்து அரசியல் செய்கின்றனர் என்றார்.