

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து மே.இ.தீவுகளின் ஆந்த்ரே ரஸல் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ‘பவர் கோச்’ என்ற பணியில் அபிஷேக் நாயர், வாட்சன், பிராவோ, சவுதீ ஆகியோருடன் இணையவிருக்கிறார்.
“நான் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனாலும் உலகத்தின் மற்ற லீகுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிற அணிகளிலும் ஆடுவேன். கேகேஆரில் எனக்கு சில அபாரமான நினைவுகள் உள்ளன. சிக்சர்கள் அடிப்பதும் ஆட்டத்தை வெற்றி பெற்றுக் கொடுப்பதும் என நிறைய மலரும் நினைவுகள்.
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். நான் இந்த முடிவை எடுத்த போது ‘ஆம் இதுதான் சரியான தருணம்’ என்று நினைத்தேன். நான் மங்கிப் போக விரும்பவில்லை. என் வழிமுறையை விட்டுச் செல்ல வேண்டும், ரசிகர்கள் ஏன் அதற்குள் ரிட்டையர் ஆனீர்கள், இன்னும் உங்களிடம் பங்களிக்க நிறைய கிரிக்கெட் உள்ளதே என்று சொல்லும் நிலையிலேயே ஓய்வு பெறுவதுதான் நல்லது.
"நாம் இன்ஸ்டாகிராம் உலகத்தில் வாழ்கிறோம். அதனாலேயே, நீங்கள் உங்கள் பதிவை பார்க்கும் போது பல்வேறு ஜெர்சிகளில் உங்களையே காண்கிறீர்கள். நண்பர்கள், அணித் தோழர்கள் பல விஷயங்களை அனுப்பிவிட்டு, ‘இந்த ஜெர்சியில் நன்றாக இருக்கிறாய், என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்கிறார்கள். நான் மட்டும் ‘ஹூம்… இந்த ஜெர்சியில் நான் கொஞ்சம் விசித்திரமாகத் தெரிகிறேன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அப்படிப் பட்ட எண்ணங்கள் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. பல இரவுகள் தூக்கம் வரவில்லை. என் IPL பயணத்தின் புதிய அத்தியாயம் குறித்து, நான் மற்றும் வெங்கட் மைசூர், அத்துடன் ஷாருக் கான் ஆகியோருடன் நிறைய கலந்தாலோசித்தேன். அவர்கள் எனக்கு காட்டிய மரியாதையும் பாசமும், நான் மைதானத்தில் செய்த செயல்களை அவர்கள் மதிப்பதையும் பார்த்தால், எனக்கு பரிச்சயமான ஒரு சூழலில் இருப்பது மிகவும் முக்கியமானது என்பதை உணர்கிறேன்." என்று தன் வீடியோ மெசேஜில் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014-ல் கோப்பையை வென்ற போதும், 2024-ல் மீண்டும் வென்ற போதும் அணியில் இருந்தார் ஆந்த்ரே ரஸல். 2019-ல் மதிப்பு மிக்க வீரர் என்ற விருதையும் தட்டிச் சென்றார். கேகேஆரில் 16 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
ஷாரூக்கானும் தன் எக்ஸ் தளப்பதிவில் ஆந்த்ரே ரஸலுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிடுகையில், “அற்புதமான நினைவுகளுக்கு நன்றி, ஆண்ட்ரே. எங்களின் பிரகாசிக்கும் கவச மாவீரா!!! உங்களுடைய சாதனைகள் கேகேஆர் சாதனை புத்தகங்களில் இருக்கின்றன. இப்போது பவர் கோச் என்று உங்களுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் திறக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
2012-ல் ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஆந்த்ரே ரஸல் 140 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 7 போட்டிகள் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கும் மீதமுள்ள 133 போட்டிகள் கொல்கத்தாவுக்கும் ஆடியுள்ளார். 2,651 ரன்களை 174.17 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 123 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அவர் கடைசியில் இறங்கி அடிக்கும் திகைப்பூட்டும் சிக்சர்களையும், அருமையான ஸ்லோயர் ஒன்களையும் டைட் இறுதி ஓவர்களையும் கொல்கத்தா அணி இழக்கவே செய்யும்.