

புதுடெல்லி / சென்னை: தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை டெல்லிக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் கல்யாணராமன் மனு தாக்கல் செய்துள்ளார்.
2006-11 திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2012-ல் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல, வருவாய்த் துறை அமைச்சராக உள்ள சாத்தூர் ராமச்சந்திரன் 2006-2011-ல் திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, அவரும், அவரது மனைவி ஆதிலட்சுமியும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 லட்சம் சொத்து சேர்த்ததாக 2012-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறு விசாரணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை டெல்லிக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் கல்யாணராமன் சார்பில் வழக்கறிஞர் ரிஷிகுமார் சிங் கௌதம் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர் கல்யாணராமன் சார்பில் மூத்த வழக்கறிஞர் மனன் குமார் மிஸ்ரா ஆஜராகி, “இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ளவர்கள் தமிழகத்தின் அதிகாரம் மிக்க அமைச்சர்களாக உள்ளனர்” என்று வாதிட்டார்.
வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், கல்யாண ராமன் தாக்கல் செய்த மனுவை, மறு விசாரணையை எதிர்த்து தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவுடன் இணைக்க உத்தரவிட்டது.