

படம்: ர.செல்வமுத்துகுமார்
சென்னை: விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக வேட்புமனுவில் கூறியிருப்பதை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், 2 தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்றும், பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை ரூ.100 கோடி வரை குறைத்துக் காட்டியுள்ளார் என்றும் கூறி பெரம்பூர் தொகுதி வாக்காளரான வியாசர்பாடி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, விஜய்யின் வேட்புமனு தொடர்பாக பெரம்பூர் தொகுதியின் மற்றொரு வாக்காளர் வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது: விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து கோரி சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவருக்கு கடன் கொடுத்ததாக விஜய் கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல, தனியார் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி நிதி வழங்கியிருப்பதாக வேட்புமனுவில் கூறியிருப்பது குறித்தும் விஜய் விளக்கம் அளிக்கவில்லை. வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் விதிமீறல் மட்டுமின்றி சட்ட விரோதமும்கூட. எனவே, விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்ய வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இந்த மனுவை விசாரி்த்தது. இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இதை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.