

சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் மீது வழக்குப்பதிய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி திமுக எம்.பி. கிரிராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அத்தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முன்னாள் அமைப்புச்செயலாளரான கேசவ விநாயகம் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கும் உத்தரவிடக்கோரி திமுக எம்.பி. ஆர்.கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த விவகாரத்தி்ல் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
யார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்பதை அதிகாரிகள்தான் முடிவு எடுக்க முடியும் என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திமுக எம்.பி. கிரிராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.