சென்னை: புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் உள்ள கட்சி பொது சின்னம் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.9-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 23-ம் தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. புதுச்சேரியில் தவெக-வுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் நேயம் மக்கள் கழகத்தின் தலைவரான நேரு என்ற குப்புசாமி தங்களது கட்சிக்கு பொது சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வு விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பி்ல் ‘‘எங்களது கட்சி புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த மார்ச் 23 அன்று மாலை 5.30 மணிக்குத்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அதற்கு முன்பாகவே நாங்கள் முறையாக விண்ணப்பித்து விட்டோம். எனவே தவெக கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிடும் எங்களது கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து விட்டால் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி விடும். இந்த தேர்தலில் மனுதாரர் கட்சி்க்கு சுயேச்சை வேட்பாளருக்கான சின்னமே கிடைக்கும்.
அடுத்த தேர்தலில் வேண்டுமென்றால் பொது சி்ன்னம் கோரலாம்’’ எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.