

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு, வேள்வி பூஜைகளை தமிழில் நடத்தக் கோரிய மனுவை பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையைச் சேர்ந்த டி.சுரேஷ்பாபு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் சண்டீகேஸ்வரர் சேவை அறக்கட்டளைத் தலைவராக இருந்து வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தி வருகிறோம்.
பிரபல கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் போது வேள்வி குண்ட பூஜைகளுக்கு சம்ஸ்கிருத வேள்வி ஆசிரியர்கள் தான் அழைக்கப்படுகின்றனர். தமிழ் வேள்ளி ஆசிரியர்களை அழைப்பதில்லை. அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் குடமுழுக்கு விழாக்களில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில்லை.
இதையடுத்து தமிழக கோயில்களில் குடமுழுக்கு வேள்வி, குண்ட நிகழ்வில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்கக் கோரிய வழக்கில் அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் திட்டத்தை உருவாக்க அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அந்த உத்தரவை அறநிலையத் துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
தற்போது கோயில் குடமுழுக்கு விழாக்களில் சம்ஸ்கிருத வேள்வி ஆசிரியர்களையே யோக குண்ட நிகழ்வுக்கு அழைக்கின்றனர். என்னைப் போன்ற தமிழ் வேள்வி ஆசிரியர்களை வேள்வி குண்ட நிகழ்வுக்கு அழைப்பதில்லை.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த குட முழுக்கு மற்றும் வேள்வி பூஜைகளை தமிழில் நடத்தவும், இந்நிகழ்வுகளில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.