

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் நேயம் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 4-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள புதுச்சேரி காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான காலாப்பட்டில் தொடங்கி கடலூர் அருகேயுள்ள முள்ளோடை வரை 23 இடங்களில் காலை 9.30 முதல் இரவு 9.30 வரை வேனில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை அனுமதி தரப்படவில்லை.
இதுதொடர்பாக புதுச்சேரி காவல் துறை உயரதிகாரிகளின் வட்டாரங்களில் விசாரித்த போது, ‘‘விஜய் பிரச்சாரத்துக்குக் கேட்கப்பட்ட 23 இடங்களில் 19 இடங்களுக்கு அனுமதி இல்லை. 4 இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
குறைந்த நேரத்தில் முடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநில சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து விஜய் பிரச்சாரத்துக்கு தவெக கட்சியினர் யாரும் வர அனுமதி இல்லை” என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு மற்றும் தேர்தல் இணை கண்காணிப்பாளர் புதியவன் கூறுகையில், ‘‘கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், சோனாம்பாளையம் சந்திப்பு, வில்லியனூர் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் எங்கள் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி அளித்துள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை 4 மணி நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடிக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது. எனினும் கூடுதலாக 2 மணி நேரம் அதாவது 6 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்" என்றார்.
வீடியோ பிரச்சாரம்? - பிரச்சார பயணத்தில் கூடும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பிரச்சினை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் புதுச்சேரியில் விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தவெக தரப்பில் இதுபற்றி விசாரித்தால் விரைவில் தெரிவிக்கிறோம் என்கின்றனர்.