

சென்னை: சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம், 18 பெட்டிகளில் இருந்து 23 பெட்டிகளாக அதிகரிக்கப்படுகிறது. கூடுதல் பெட்டிகள் இணைப்பு ஜூன் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினசரி மாலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை திருச்செந்தூரை சென்றடைகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பயணிகள் நெரிசல்
இருப்பினும், இந்த ரயில் 18 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால், பல நேரங்களில் பயணிகள் நெரிசலுடன் பயணிக்கும் நிலை இருக்கிறது.
எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க ஏபிஜிபி நுகர்வோர் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து, கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைத்து, 18-ல் இருந்து 23 பெட்டிகளாக இயக்கப்பட உள்ளது.
அதன்படி, முதல் வகுப்பு ஏசி பெட்டி, இரண்டடுக்கு ஏசி பெட்டி தலா ஒன்று, மூன்றடுக்கு ஏசி பெட்டி 3, இரண்டாம் வகுப்பு 3 அடுக்கு தூங்கும் வசதி பெட்டி 12, பொது பெட்டி 4, லக்கேஜ் வகுப்புடன் பொது பெட்டி 2 என மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைப்பு ஜூன் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.