45 நாட்களுக்கு பிறகு பெரியாறு அணைக்கான நீர்வரத்து 1,000 கனஅடியை கடந்தது

வலுப்பெற்ற வடகிழக்கு பருவமழை தாக்கம்
45 நாட்களுக்கு பிறகு பெரியாறு அணைக்கான நீர்வரத்து 1,000 கனஅடியை கடந்தது
Updated on: 
2 min read

குமுளி: வடகிழக்குப் பருவமழை தொடங்கிய ஒரு வாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை வலுப்பெற தொடங்கியது. இதனால் 45 நாட்களுக்குப் பிறகு அணைக்கான நீர்வரத்து 1,000 கனஅடியை கடந்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான பிரதான ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால் அணையில் நீர் இருப்பு குறைந்தது. இதனால், கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர், இரண்டு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 8-ம் தேதி திறக்கப்பட்டது.

மேலும் கால்வாய் பாசனமும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே சென்றது.

இதையடுத்து, தமிழகப் பகுதிக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு 800 கன அடியிலிருந்து 400 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை அணைக்கான நீர்வரத்து 197 கன அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, அணைப் பகுதியில் 3.4 மி.மீ., தேக்கடியில் 9.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், அணைக்கு நீர்வரத்து 1,030 கன அடியாக அதிகரித்துள்ளது.

தற்போது அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 116.90 (மொத்த உயரம் 152) அடியாகவும், மொத்த நீர் இருப்பு 2,069 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சமீபமாக நீர்வரத்து குறைந்தளவே இருந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு இன்று 1,000 கனஅடியை கடந்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பருவமழையால் முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி, தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

45 நாட்களுக்கு பிறகு பெரியாறு அணைக்கான நீர்வரத்து 1,000 கனஅடியை கடந்தது
பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 7 கூறல் மீன்கள் ரூ.3.67 லட்சத்துக்கு விற்பனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in