

பாம்பனில் சிக்கிய கூறல் மீன்கள்
ராமேசுவரம்: பாம்பன் அருகே மீனவர் வலையில் ஏழு அரிய வகையான கூறல் மீன்கள் சிக்கின. 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.3.67 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து நேற்று 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு இன்று மீனவர்கள் மீண்டும் கரை திரும்பினர்.
கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில் உள்ள நெட்டி
இதில் ஒரு மீனவர் வலையில் சராசரியாக 15 கிலோ எடையில் ஏழு கூறல் மீன்கள் சிக்கியுள்ளன. சுமார் 105 கிலோ எடை கொண்ட இந்த ஏழு கூறல் மீன்கள், கிலோ ஒன்றுக்கு ரூ.3,500 வீதம் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.
கூறல் மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறும்போது, “இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டி மருத்துவ பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது.
மேலும், உயர் ரக மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவற்றை சுவையாகவும், கெட்டுப் போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது” என்று கூறினர்.