

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நேற்று நடைபெற்றது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசன உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஆக.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 4-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசனம் நேற்று நடைபெற்றது. அதிகாலை 12 மணி அளவில் ஆடிப்பூரக் கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளினார். அதன்பின் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளிய பெரிய பெருமாள், கள்ளழகர் கோயில் சுந்தர்ராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள், நின்ற நாராயணப் பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.
அதை தொடர்ந்து மூக்குத்தி சேவையில் ரெங்கமன்னார் உடன் எழுந்தருளிய ஆண்டாள் தாயாருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்தரிசனம் செய்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் 5 கருடசேவை நடைபெற்றது. இதில் 5 பெருமாள்களும் கருட வாகனங்களிலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, ரத வீதிகளில் வீதி உலா வந்தனனர்.
7-ம் நாள் விழாவான நாளை (ஆக.12) இரவு கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கும் சயன சேவை உற்சவம் நடைபெறுகிறது. உச்ச நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்ட விழா ஆக14-ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.