தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் வழக்கு: சென்னை ஐகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் வழக்கு: சென்னை ஐகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை
Updated on
2 min read

புதுடெல்லி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சரான கே.ஆர்.பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதையடுத்து தபால்வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்றும், தனது தொகுதிக்கான ஒரு வாக்கு தொகுதி மாற்றி வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்கை மீட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக்கூடாது என தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘ஒரு தபால் வாக்கை அதே பெயர் கொண்ட வேறு ஒரு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டதாக மனு தாரர் குற்றம்சாட்டியுள்ளார். இது போன்ற சிக்கலான சூழல்களில் சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகள் தேர்தல் ஆணைய விதிமுறைகளில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதை ஒரு காரணமாக சுட்டிக்காட்டி தேர்தல் வழக்கு தொடரவும் சட்டத்தில் இடமில்லை. ஏனெனில், வாக்குகளை முறையற்ற வகையில் ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது, முறைகேடுகளில் ஈடுபடுவது, உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாதது போன்ற செயல்களை எதிர்த்தே தேர்தல் வழக்கு தொடரமுடியும்.

இருவருக்கும் இடையே ஒரு ஓட்டுதான் வித்தியாசம் என்பதால் இந்த வழக்கை முக்கியமற்றதாகவும் கருத முடியாது. எனவே தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இத்தடையை எதிர்த்து தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி, ‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்த ரிட் மனு, ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பிழை இருப்பதால், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு எடுப்பு நடைபெற்று வருகிறது’’ என்று வாதிட்டார்.

பெரிய கருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்கின் பின்னணியை குறிப்பிட்டு, அசாதாரண சூழலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததற்கான காரணத்தையும் விளக்கினார். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் வெற்றி தோல்வி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு செய்து விட்டதால் மனுதாரரின் பங்களிப்பு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, ‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையம் யாருக்கு ஆதரவாக உள்ளது? தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதே தீர்வு என்று தெரிவித்துவிட்டு, ரிட் மனுவை விசாரித்தது கொடுமையானது’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு விதித்த இடைக்காலத் தடையை நிறுத்திவைத்ததுடன், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் மேல்முறையீடு மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க பெரிய கருப்பன், தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை மே 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி பெரியகருப்பன் தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவும் இடைக்காலத் தடை விதித்தனர்.

தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் வழக்கு: சென்னை ஐகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை
நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு: வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in