

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.
சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட முடியும். அந்த வகையில், சட்டப்படிப்பை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று நடத்தியது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்து 250 சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர். புதிதாக வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வரவேற்புரையாற்றினார்.
இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சந்திரசேகர், பதிவை முன்மொழிந்தார். பதிவுக்குழு தலைவர் வழக்கறிஞர் பாலு, புதிய வழக்கறிஞர்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைத்தார். பதிவுக்குழு உறுப்பினர் பிரிசில்லா பாண்டியன் நன்றியுரை ஆற்றினார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது. இதுசம்பந்தமாக காவல் துறையிடம் ஆட்சேபனையில்லா சான்று பெறப்படும். பேரறிவாளனுக்கு எதிராக ராஜிவ் கொலை வழக்கு மட்டும் இருந்தது. இந்த வழக்கில், அவர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால், அவர் வழக்கறிஞராக பதிவு செய்ய ஆட்சேபமில்லா சான்று காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.