பெரம்பலூரில் போதிய நீரின்றி கருகும் 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூரில் போதிய நீரின்றி கருகும் 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on
2 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் போதிய நீரின்றி 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள் கருகி வருகிறது. இந்த பாதிப்பை அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெரம்பலூரில் மக்காச்சோளம், சின்ன வெங்காயத்திற்கு அடுத்தப்படியாக பிரதான பயிராக மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பொங்கலுக்கு முன்பு இந்த மஞ்சள் சாகுபடி செய்யப்படும். அதன்படி வரவிருக்கும் பொங்கலையொட்டி, ஆனி, ஆடி, ஆவணி பட்டத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.

இதில் அதிகப்படியாக வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர், குடிகாடு, தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், எசனை, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களில் தை அறுவடையை மையமாக கொண்டு மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

எல் நினோ வெப்ப அலை மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் மஞ்சள் செடிகள் கருகி வருகிறது. இதனால் தை அறுவடைக்கு மஞ்சள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு வரவில்லை என்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கிடைப்பது சிரமம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நீலகண்டன் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு கூறுகையில், “பெரம்பலூரில் வேப்பந்தட்டை உள்பட அனைத்து வட்டங்களிலும் பல ஆயிரம் ஏக்கருக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பெரம்பலூரில் வெயில், போதிய மழை இல்லாததால் மஞ்சள் செடி கருகி பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.

ஆள் கூலி, உரம் என ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்து, முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பருவமழை ஏமாற்றம், அதிகளவு வெயில், சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை என்ற காரணங்களால் மஞ்சள் செடிகள் கருகி, பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. வேப்பந்தட்டை வட்டத்தில் மட்டும் 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள் கருகி விட்டன.

இதேபோல பெரம்பலூரில் எசனை, குன்னம் வட்டத்தில் கீழப்புலியூர் உள்பட பல்வேறு இடங்களில் மஞ்சள் பயிர் கருகிவிட்டது. இனி மழை பெய்தாலும், பயனில்லை. எனவே பொங்கலுக்கு போதிய மஞ்சள் அறுவடை செய்வது கடினம். வெளி மாவட்டத்தில் இருந்து மஞ்சளை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே அரசு பாதிப்பை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் போதிய நீரின்றி கருகும் 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூரில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in