

விபத்துக்குள்ளான கார் மற்றும் விபத்தில் உயிரிழந்த காளீஸ்வரன், கார்த்திக் (இடமிருந்து வலமாக)
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்தின் மீது பின்னால் சென்ற கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக் (38). இவரது நண்பர்கள், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பிரபாகரன்(30), முதுகுளத்தூர் அம்மாசி மகன் கார்த்திக் (38), கண்ணாயிரம் மகன் காளீஸ்வரன் (25), ஓரி வயல் முருகேசன் மகன் கண்ணதாசன் (22), கார்த்தி மனைவி சூர்யா (35), தேவிபட்டினம் சபரிகன் மகன் ஜான் கென்னடி (35), ரவி மனைவி சரண்யா (23). இவர்கள் அனைவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கார்த்திக்கின் தம்பி ரஜினிகுமாரின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 7 பேரும் சென்னையில் இருந்து ஒரு காரில் ராமநாதபுரத்திற்கு சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததும், காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரபாகரன், காளீஸ்வரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மீதமுள்ள 5 பேரும் உயிருக்காக போராடி கொண்டிருந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பெரம்பலூர் டவுன் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த, சூர்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
மற்றவர்களான கண்ணதாசன், ஜான் கென்னடி, சரண்யா ஆகிய 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்ந்து திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீஸார் வாகனங்களை அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் தூத்துக்குடி மாவட்டம், நாசரேட் பகுதியை சேர்ந்த ஆம்னி பேருந்து டிரைவர் ராஜசீலன் (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.