

ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள ஜெம் வீரமணி வீடு.
சென்னை: ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் போலீஸார் உச்ச கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவரது வீடு, அலுவலகம் உட்பட 5 இடங்களில் சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
பணம், செல்போன், பரிசுப் பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்து சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர்.வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ மூலம் இந்த தகவல் வெளியானது.
குறிப்பாக இவர் ஏழ்மை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இவரால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் நாள்தோறும் ஒவ்வொரு தகவல்களாக வந்தவண்ணம் உள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் ஜெம் வீரமணி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக வீரமணியின் ஜெம் கிரானைட்ஸில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த கணேசன் என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். அவரிடமும் ஜெம் வீரமணி தொடர்பான ரகசிய வீடியோக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் யார் யார்? அவருக்கு உடந்தையாக இருந்தது யார்?
வீரமணி போன்று சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த செல்வந்தர்கள் யார் யார் என ஒரு தனிப்படையும், வீரமணியின் வீடியோவைக் காண்பித்து, மிரட்டி பணம் பறித்த கும்பலில் உள்ளவர்கள் யார் யார் என்று மற்றொரு தனிப்படையும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக பலரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், பலருக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் அடுத்தடுத்து சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகச் சாந்தியிடம் கடந்த ஆண்டே போலீஸார் விசாரித்துள்ளனர்.
ஆனால், அவர் அனைத்து குற்றங்களையும் மூடி மறைத்துள்ளார். அப்போது, வழக்கை நீர்த்து போகும்படி செய்த காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் தனியாகச் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ள போலீஸார், இதற்காக அவர்களுக்கும் சம்மன் அனுப்ப உள்ளனர். இதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கோபாலபுரத்தில் உள்ள வீடு.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியில் உள்ள வீரமணியின் வீடு, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் நீலாங்கரை, தி.நகர் பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகம் என வீரமணிக்குச் சொந்தமான 5 இடங்களில் சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சிறுமியைச் சீரழித்தது தொடர்பான மேலும் சில வீடியோக்களைப் போலீஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, வீரமணியின் கூட்டாளிகள் யார், யார், இந்த விவகாரத்தை மூடி மறைக்க யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வீடியோ தவிர பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களை சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க வீரமணி தொடர்பான சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சென்னை இசிஆர் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் ஜெம் வீரமணிக்குச் சொந்தமான 2 நிலங்கள் அவசரமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு நிலம் சுமார் ரூ.43 கோடிக்கும், மற்றொரு நிலம் சுமார் ரூ.36 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, இந்த நிலம் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு நிலங்களும் சேர்த்து ரூ.79 கோடிக்கு விற்பனை செய்யப் பட்ட ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
மேற்கொண்டு கிடைக்கும் தகவல்கள், ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸார் அடுத்தகட்ட விசாரணை யைத் தீவிரப்படுத்த திட்ட மிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வீரமணியின் செயல்களுக்குச் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் துணையாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகுதான் சாந்தி தரப்பினர் வீரமணியின் செயல்களை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இதற்காக விலை உயர்ந்த கேமராக்களை வாங்கி உள்ளனர். அவற்றை வீரமணியின் ரகசிய அறையில் பொருத்தி உள்ளனர். பின்னர், அவற்றை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளனர்.
இந்த வீடியோக்களைச் சாந்தி தனது நண்பர்கள் மற்றும் வீரமணியின் எதிர் தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதற்காகச் சிலரிடம் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நேரடியாகச் சிறுமிகளுடன் உள்ள வீடியோக்களைக் காண்பித்து வீரமணியை மிரட்டியதாகத் தெரிகிறது. ஆனால், அவர் பணிய மறுத்ததால் வீரமணியின் எதிர் தரப்பினருக்கு வீடியோ சென்றுள்ளது.
இதில், சில வீடியோக்கள் மிரட்டல் கும்பலிடம் கிடைத்துள்ளது. அந்த வீடியோக்களை வைத்து, வீரமணியிடம் அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளது. தனது உண்மை முகம் வெளியே தெரிந்து விடும் என பயந்த வீரமணி கோடிக்கணக்கான சொத்துகளைக் குறைந்த விலைக்கு அவசர அவசரமாக விற்று மிரட்டல் கும்பலுக்குப் பணத்தை வாரி இறைத்து உள்ளார்.
இந்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியையும் பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் நாடியுள்ளனர். செல்போன் தொடர்பு விவரங்கள் அடிப்படையிலும், கைதான வர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படை யிலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த தகவல்கள் அடிப்படையிலும் சிறுக சிறுக தகவல்களைத் திரட்டி பணம் பறித்த கும்பல் மற்றும் வீரமணியின் கூட்டுப் பாலியல் வேட்டை கும்பலை அடையாளம் கண்டு வருகிறோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
யாரும் தப்பிக்க முடியாது: சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: ஜெம் வீரமணி விவகாரத்தில், ‘வீடியோ தெளிவாக இல்லை’ என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. அவருக்கு ஹெச்.டி. வீடியோதான் வேண்டுமா என்ன? முன்பு இந்த வழக்கை மூடுவதற்கு உத்தரவிட்டது யார்? திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார பலமிக்க வீரமணி மீதான விசாரணையைத் தடுத்தது யார்? இன்னும் இந்த வழக்கில் யாரைக் காப்பாற்ற கடந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்?
இந்த கேள்விகளுக்குத் திமுகவினர்தான் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு முதல்வரின் தனி கண்காணிப்பில் இருக்கிறது. நிச்சயமாக யாரும் தப்பிக்க முடியாது. மூடி மறைக்கப்பட்ட அத்தனை வழக்குகளும் தவெக ஆட்சியில் திறக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.