

சென்னை: துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி: இந்திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார்.
அவரும் அடுத்த விமானத்தில், இங்கு வந்துவிடுவார். துபாயில் வீடுகளின் மேலேயே, விமானங்கள் பறந்து கொண்டு, பயங்கரமான சத்தமாக இருந்தது. 3 நாட்களாக இரவில் தூங்க முடியாமல் தவித்தோம். தற்போது பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டோம்.
துபாய் விமான நிலையத்தில் எந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பதற்றமாகவும், பரபரப்பாகவும் இருந்தது. மின்சாரத்தை தடை செய்திருந்தார்கள். நாங்கள் இருளிலேயேதான், தவித்துக் கொண்டிருந்தோம். 3 நாட்களுக்கு பிறகு விமானத்தில் அமர்ந்ததும், நிம்மதியடைந்தோம்.
துபாய்க்கு சுற்றுலா சென்று சிக்கிய கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திக்: குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றோம். கடந்த 28-ம் தேதி சென்னைக்கு திரும்ப, துபாயிலிருந்து விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்.
அன்று மாலை, துபாய் விமான நிலையத்துக்கு வந்தபோது, போர் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம். பின்னர், துபாய் விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கினோம்.
அன்று இரவு முழுவதும் போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே குண்டுகள், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம் அதிகமாகக் கேட்டது. இதனால் நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்தோம்.
சென்னை திரும்ப ஒரு வாரம் ஆகும் என்று நினைத்தோம். அதனால், துபாயிலிருந்து மஸ்கட் செல்ல திட்டமிட்டோம். அப்போது தான் எமிரேட்ஸ் விமானம் சென்னைக்கு புறப்படுவதாக அறிவிப்பு வந்தது. அந்த விமானத்தில் நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம்.
விமானத்தில் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர். சுற்றுலா சென்ற நாங்கள் போர் சூழலில் சிக்கியது மிகவும் பயமாக இருந்தது. ஒரு வழியாக பத்திரமாக சென்னைக்கு திரும்பிவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.