

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
தென்னை, வாழை, ‘மா’ மரங்களையும், தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் யானைகள் சேதப்படுத்துகின்றன. வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விவசாய நிலங்களில் யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும், விவசாய நிலங்களையும் கடந்து குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் யானைகள் அவ்வப்போது வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு அச்சன்புதூர் அருகே உள்ள நெடுவயல் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் 2 காட்டு யானைகள் புகுந்துள்ளன. இந்த பகுதிக்கு அருகில் அரசுப் பள்ளி உள்ளது.
இன்று காலையில் தென்னந்தோப்பில் 2 யானைகள் நிற்பதை பார்த்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை, வருவாய்த்தறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பகல் நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினால் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால், யானைகள் அருகில் உள்ள குளத்தில் தஞ்சமடைந்த நிலையில், அவை அங்கிருந்து வெளியேறாதவாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானைகள் தஞ்சம் அடைந்திருக்கு பகுதி மக்கள் யாரும் யானைகள் அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்ப அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மின் விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அச்சன்புதூர் - தென்காசி சாலையில் போக்குவரத்துக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.