கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
Updated on
1 min read

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 25) முதல் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம், இயற்கை எழில் கொஞ்சும் சூழலாலும், குளிர்ந்த நீரோட்டத்தாலும் நிறைந்த முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் போளுவாம்பட்டி வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பெருமளவு மழைநீர் அடித்துவரப்பட்டு, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதோடு, நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் யாரும் எதிர்பாராத விபத்துகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாகவும், அருவியில் குளிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போளுவாம்பட்டி வனத்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மழை நின்றும்கூட, அருவியில் நீரின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பி முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் மலைப்பகுதியில் உள்ள அருவிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி கோவை குற்றாலம் பகுதிக்கு நுழைவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் - யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in