“மக்கள் நல நிதிநிலை அறிக்கை இது!” - தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், முழுமையான மக்கள் நல நிதிநிலை அறிக்கை” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2026–2027-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (17.02.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சமூக நீதி, கல்வி முன்னேற்றம், பெண்கள் அதிகாரமளித்தல் மூலமாக தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான மக்கள் நல நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி, உயர் கல்விக்கு ரூ.8,505 கோடி என கல்விக்குத் தாராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மாணவர்களின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் முயற்சியாகும். 'புதுமைப் பெண்' திட்டம் மூலம் மாணவியருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, காலை உணவுத் திட்டம் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவது ஆகியவை சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாகும்.

ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, மின்துறை போன்ற அடிப்படை துறைகளுக்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மாநிலத்தின் சமநிலையான வளர்ச்சியை நோக்கிய தெளிவான பார்வையை வெளிப்படுத்துகிறது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவி, பெண்கள் பெயரில் சொத்து பதிவு கட்டணம் குறைப்பு போன்ற அறிவிப்புகள் பெண்களின் பொருளாதார சுயசார்பு நிலையை வலுப்படுத்தும் வரலாற்றுச் செயல்களாகும்.

செமிகண்டக்டர் மேம்பாட்டு திட்டம், தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், சென்னை மெட்ரோ விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள் தமிழ்நாட்டை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் முயற்சிகளாகும்.

மொத்தத்தில், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை 'அனைவருக்கும் வளர்ச்சி – அனைவருக்கும் நலன்' என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை நிதிநிலை அறிக்கையாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் முன்னேற்றப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் இந்த மக்கள் நலன் சார்ந்த நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
தமிழக இடைக்கால வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in