எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
மதுரை: ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பேசியதாவது: திமுக கூட்டணியில் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி, இரண்டாவது பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
இந்திய நாடே தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்று உற்றுநோக்கி பார்த்து வருகிறது. மக்கள் விரோத ஆட்சியை அகற்றவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியில் மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிகள் இணைந்துள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு தென் மாவட்ட மக்கள் பக்கபலமாக இருந்தனர்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது திண்டுக்கல் மக்களவைத்தேர்தலில் வெற்றியை கொடுத்து தென் மாவட்ட மக்கள் ஆதரித்தனர். அதுபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை அதிக தொகுதிகளில் வெற்றிபெறச் செய்து அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்.
அதிமுகவை பொறுத்தவரையில் அது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. பல்வேறு சோதனைகளை கண்ட கட்சி. 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. தமிழகம் இந்தளவுக்கு வளர்ந்துள்ளதற்கு எங்கள் அதிமுக தலைவர்கள் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததே முக்கிய காரணம்.
பிரதமர் மோடி உலக நாடுகளே பொறாமைப்படும் அளவிற்கு இந்திய நாட்டை ஆட்சி செய்கிறார். முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி மத்திய ஆட்சியர்கள், எந்த வளர்ச்சியும், நிதியையும் தமிழகத்திற்கு கொடுக்கவில்லை என்று அவதூறுகளை பரப்பி வருகிறார். இன்று இந்த மேடைக்கு வருவதற்கு முன் கூட அரசு விழாவில் தமிழகத்திற்கு ரூ.4,500 கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு கொடுத்து விட்டுதான் வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தமிழகத்திற்கு பிரமர் மோடி வாரி வழங்கி வருகிறார். ஆனால், திமுக கூட்டணி கட்சியினர் செய்த சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாமல் மத்திய அரசு மீது திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பி வெற்றிபெற பார்க்கிறார்கள்.
திமுகவுக்கு குடும்ப நலன் மட்டுமே அக்கட்சியின் நிலைபாடாக உள்ளது. காற்று கண்ணுக்கு தெரியாது. ஆனால், அந்த காற்றில் கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தனர். திமுக விஞ்ஞான முறையில் ஊழல் செய்த கட்சி என்று சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தென் மாவட்டங்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக்கல்லூரியைக் கூட பெற முடியவில்லை. பாம்பன் ரயில்வே பாலத்தை பிரதமர் கட்டி கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதுதான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனைப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த மருத்துவமனையை வர விடாமல் திமுக தடுக்க பார்த்தது. மதுரை விமானநிலையம் விரிவாக்கம் செய்வதற்கு அதிமுக ஆட்சியில் ‘அன்டர் பாஸ்’ முறையில் பல்வேறு முயற்சிகளைச் செய்தோம். தற்போது இந்த திட்டத்தையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மதுரை விமானநிலையம் விரிவாக்கத்திற்கு திமுக ஆட்சியில் எந்த முயற்சியும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.