

சென்னை வடபழனி முருகன் கோயிலை சுற்றியுள்ள பகுதி சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: வடபழனி முருகன் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் பக்தர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மாநகரின் மிக முக்கியமான ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது வடபழனி முருகன் கோயில். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக, செவ்வாய்க்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ காலங்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து, மாட வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்காடு சாலை வழியாக ஆண்டவர் தெருவையும், நூறடி சாலை வழியாக அம்மன் கோயில் தெரு மற்றும் வடக்கு மாட வீதியையும் பிரதான வழிகளாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக இந்தப் பகுதிகளில் திட்டமிடப்படாத வாகன நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் நூறடி சாலை அருகே கார் நிறுத்துமிடமும், ஆண்டவர் தெருவில் இருசக்கர வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், பல வாகன ஓட்டிகள் விதிகளுக்குப் புறம்பாக அம்மன் கோயில் தெரு, ஆண்டவர் தெரு மற்றும் மாட வீதிகளிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்களது வாகனங்களை சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே நிறுத்திவிடுகின்றனர். இதனால், கோயில் நுழைவாயிலுக்கு செல்லும் பக்தர்கள் விபத்து அச்சத்துடனேயே நடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேலும், நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பக்தர்கள் சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது.
குறுகலான மாட வீதிகளில் கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுத்து நிற்பதால், மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வரும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியேயும் இத்தகைய நெரிசலில் சிக்கித் தவிப்பது பெரும் மன உளைச்சலை தருகிறது. எனவே, சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாட வீதிகள் மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதோடு, விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமயைாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.