

தஞ்சாவூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இக்கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை தமிழகத்தில் திணிப்பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜக, தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மையான கடமையாகும். எனவே, பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.