

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘நீதித் துறையின் பொறுமையை சோதிக்கக் கூடாது’ என்றனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதிக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ‘நீதித் துறைக்கு எதிரான எந்தவொரு கருத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நீதிபதிகள் வெளிப்படையாக எதிர்வினையாற்ற முடியாது என்பதற்காக, நீதிமன்றத்தைத் தூண்டிவிடக் கூடாது. வரம்புகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓரளவுக்கு தான் பொறுத்துக்கொள்ள முடியும். அது மீறினால் உரிய நடவடிக்கை எடுப்போம். நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எதிர்வினையாற்றக் கூடாது என்பதை பயன்படுத்திக் கொள்ள முடியாது.
நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது. நீதித் துறையை இழிவுபடுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டத்தை மீறும் நபர்கள் எந்த எதிர்வினையும் இருக்காது என்று நினைக்கிறார்கள். நீதிமன்றம் தான் அனைவருக்கும் கடைசி புகலிடம், யாராக இருந்தாலும், நீதித் துறையின் மன உறுதியை குலைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாக்கு இருக்கிறது அல்லது இல்லை, அது எதுவாக இருந்தாலும் நீதித் துறையை சீர்குலைக்க முயன்றால் அரசியலமைப்பு காகிதத்தில் மட்டுமே இருக்கும்” என கருத்து தெரிவித்தனர்.
மேல்முறையீடு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு: முன்னதாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக் கோரி மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென உரிமை கோர தனி நபருக்கு சட்ட உரிமை இல்லை. தீபத்தை எங்கு ஏற்றுவது என்பது குறித்து தேவஸ்தானம் மட்டுமே முடிவெடுக்க இயலும். இதை 1994-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உறுதி செய்கிறது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆவணங்களோ, பதிவேடுகளோ, கல்வெட்டுகளோ, ஆகம தரவுகளோ இல்லை.
கோயிலின் பழக்க வழக்கங்களை மாற்ற தனிநபருக்கு உரிமை கிடையாது. மலையில் உள்ள தீபத்தூண் இதற்கு முன்பாக மதப் பிரச்சினை உருவான, பிரச்சினைக்குரிய எல்லைக்குள் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பலர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விருப்பம் உள்ளவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். அனைத்து மனுக்களும் டிச.12-ல் விசாரிக்கப்படும். அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படாது’ என்றனர்.
அப்போது, தொடர்ந்து அரசு வழக்கறிஞர்கள், ‘திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற விவரங்கள் பகிரப்படுவதை தடுக்க நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்’ என்று கோரினர்.
அதற்கு நீதிபதிகள், “நீதிமன்றமும், நீதிபதிகளும் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். இந்த நீதிமன்றம்தான் அனைத்துக்கும் கடைசி நிவாரணம். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியில், சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்வதை ஏற்க முடியாது” என்றனர்.