நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்க அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய அணியின் அனுபவ வீரர் விராட் கோலி. முதலில் ராஞ்சி, அடுத்து ராய்ப்பூர் என சதம் பதிவு செய்து ரசிகர்களை கோலி ஈர்த்துள்ளார். இந்த வேளையில் ‘நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி?’ என கிரிக்கெட் அபிமானிகளிடையே பேச்சு எழுந்துள்ளது.

கடந்த 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கோலி அறிமுகமானார். 2009-ல் இலங்கைக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 53, டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் 84 சதங்களை கோலி பதிவு செய்துள்ளார்.

நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ரன் மெஷின் என அறியப்படும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இளம் வயது முதலே பலரும் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசுவதும் உண்டு. அந்த வகையில் கிரிக்கெட் உலகில் நூறு சதங்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோலி படைப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71-வது சதத்தை அவர் பதிவு செய்ய எடுத்துக் கொண்ட காலம் சற்று நீளமானது. 2019 நவம்பரில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 70-வது சர்வதேச சதத்தை கோலி பதிவு செய்தார்.

அதன் பின்னர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் சர்வதேச அளவில் சதம் பதிவிட விராட் கோலி எடுத்துக்கொண்ட காலம் 1020 நாட்கள். இந்த இடைவெளி நூறு சதங்களை அவர் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பை மழுங்க செய்தது. கடந்த 2022-ல் ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தனது 71-வது சதத்தை கோலி பதிவு செய்தார். கடைசியாக ராய்ப்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் போட்டியில் கோலி சதம் விளாசினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 84-வது சதமாக அமைந்தது.

2024-ம் ஆண்டு டி20 மற்றும் நடப்பு ஆண்டில் கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி அறிவித்தார். அதோடு தனது 37-வது பிறந்தநாளை கடந்த நவம்பர் மாதம் கொண்டாடினார். ஒரு பக்கம் கோலி விளையாடும் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை குறைகிறது, மறுபக்கம் வயது கூடுகிறது. 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கோலி இடம்பெறுவாரா? என்பதும் பேசுபொருளாகி உள்ளது. இந்த சூழலில்தான் நூறாவது சதத்தை கோலி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடர் வரையில் இந்திய அணி விளையாட உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை 45. இதில் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர், ஆசிய கோப்பை மற்றும் 2027 உலகக் கோப்பை தொடரில் குறைந்தபட்சம் 11 போட்டிகளில் இந்தியா விளையாட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த 45 போட்டிகளில் 16 சதங்களை கோலி பதிவு செய்ய வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சராசரியாக 5 போட்டிகளுக்கு ஒரு சதம் என கோலி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எத்தனை காலம் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்பதும் யாரும் அறியாத ஒன்று. இப்போது அவர் சிறந்த உடல்திறனோடு, அபார ஃபார்மில் உள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் கோலி ஓய்வு அறிவிக்கலாம்.

இந்த சூழலில் காலமும் நேரமும் அவருக்கு கைகூடினால் நிச்சயம் நூறு சதங்களை கோலி பதிவு செய்ய வாய்ப்புள்ளது. ‘கிரிக்கெட் அரசன்’ என போற்றப்படும் கோலி, ஒற்றை பார்மெட்டில் ஆடி இந்த சாதனையை படைப்பது மிகவும் சவாலானது. அதே நேரத்தில் விளையாட்டில் அனைத்தும் சாத்தியம் என்பதால் கோலியின் நூறாவது சத மைல்கல் சாதனையை நேர்மறையாக பார்ப்போம்.

நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை
‘ஆன்மிகம், அரசியல், மத நல்லிணக்கம்...’ - திருப்பரங்குன்றம் விவகாரமும், சில எதிர்வினைகளும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in