

ராமநாதபுரம்: ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 7:05 மணிக்குப் புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்குப் பகல் 12:35 மணிக்கு சென்றடைகிறது. மறு வழியாக (வண்டிஎண்: 16850) மதியம் 2.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு அதே வழியில் திருச்சிக்கு இரவு 8.05 மணிக்குச் சென்று சேருகிறது.
இந்த ரயிலில் காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
இந்த ரயிலில் தினந்தோறும் திருச்சி மற்றும் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும்போதே கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரித்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் தொலை தூரத்துக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது.
இது குறித்து ராமேசுவரம் தீவு ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், “ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமேசுவரத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை அமர இடமின்றி நின்றுகொண்டே செல்ல வேண்டியுள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகள் நலன் கருதி கூடுதல் பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றனர்.