

மேகேதாட்டு
சென்னை: மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ள நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி கர்நாடகாவுக்குத் தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கர்நாடக மாநிலம், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேகேதாட்டு அணை குறித்து கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை என்பதே கூடாது.
பாமக தலைவர் அன்புமணி: மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும், இதில் மத்திய பாஜக அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும்தான். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மேகேதாட்டுஅணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு சாதகமாக செயல்படும் மத்திய பாஜக அரசின் போக்கு கண்டனத்துக்குரியது.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இரு சகோதர மாநிலங்களுக் கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்துக்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைப் பிரச்சினையில் நடுநிலையுடன் செயல்பட வேண்டிய மத்திய அரசின் பிரதிநிதி, இவ்வாறு கருத்து தெரிவிப்பது தமிழக மக்களின் உணர்வைப் புண்படுத்தும் செயலாகும்.