

வண்டலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் திமுக சார்பில் எம்.கே.டி கார்த்திக் தண்டபாணி, அதிமுக சார்பில் கஜா என்கிற கஜேந்திரன், நாதக சார்பில் அமுதா நம்பியார், தவெக சார்பில் எஸ்.தியாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் எஸ்.செல்வம் (எ) செல்லா மற்றும் 13 சுயேட்சைகள் உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்பு
திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, தொகுதியில் நன்கு அறிமுகமானவராக இருந்தாலும், முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
திமுக அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் இவர், திமுக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் தொகுதி மக்களுக்கு வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்து வருகிறார்.
மேலும் தொகுதிக்கு என்ன செய்யப்படும் என்பதையும் விவரித்தும், தான் நகராட்சி தலைவராக இருந்தபோது சிறந்த நிர்வாகத்தை வழங்கியதுபோல் தொகுதிக்கு சிறந்த எம்எல்ஏ.வாக இருப்பேன் எனவும் கூறி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கூடுவாஞ்சேரி அருகே காயராம்பேட்டில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன்.
அதிமுக - மக்கள் பாதிப்புகளை விளக்கி பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை நிறைவேற்றப்படும் என்றும், திமுக அரசால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை விளக்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார். தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவர் என்பதால் உற்சாகமாக களத்தில் வலம் வருகிறார்.
வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதா நம்பியார்
நாதக - அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உறுதி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதா நம்பியார், பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்கு சேகரித்து வருகிறார். ‘‘மக்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறோம்.
தொகுதியில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளை நிறை வேற்றிக் கொடுப்பேன்’’ என வாக்காளர்களிடம் உறுதி அளித்து வருகிறார்.
தவெக - நீர்நிலைகளைப் பாதுகாக்க முக்கியத்துவம்
தவெக வேட்பாளர் எஸ்.தியாகராஜன், ‘‘தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். திமுக - அதிமுக என மக்கள் மாறி மாறி வாக்களித்து ஏமாற்றமடைந்து விட்டனர்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் தியாகராஜன்.
அதனால் தற்போது மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்’’ என நம்பிக்கையுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அதற்கு இணையாக பிரதான கட்சிகளின் பிரச்சாரமும் செங்கல்பட்டு தொகுதியில் அனல் பறக்க நடந்து வருகிறது.