“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்” - பிரதமர் மோடி நம்பிக்கை

“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்” - பிரதமர் மோடி நம்பிக்கை
Updated on
1 min read

புது டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13-ம் தேதி வரை நடைபெற உள்​ளது. கூட்டத்தொடருக்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மழைக்காலமும், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரும் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று நான் நம்புகிறேன். மழைக்காலக் கூட்டத்தொடரின் போது ஆக்கபூர்வமான மற்றும் உண்மைகளின் அடிப்படையில் அமைந்த விவாதங்களில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும். மோதல்களை விட, உண்மைகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் வலுவான வாதங்களுக்கே அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்.

அதேபோல ஒவ்வொருவரின் குரலும் அவையில் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு கருத்தும் மதிக்கப்பட வேண்டும். மேலும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையின் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.

மேற்கு ஆசியாவில் போர் நிலவும் சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் 7.7% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. அனைத்து இந்தியர்களும் இதற்காக ஒன்றிணைந்து உழைப்பதாலேயே இது சாத்தியமாகியுள்ளது. பசுமை ஹைட்ரஜன் ரயிலைக் கொண்ட குறிப்பிட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பே இதற்குக் காரணம்.

சனிக்கிழமையன்று (ஜூலை 18) இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டது. நாட்டின் முதல் தனியார் தயாரிப்பு ஏவுகணையான 'விக்ரம்-1', பல தொழில்நுட்பச் சோதனைகளுக்குப் பின்னர் வெற்றிகரமாக புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை நிறுவனமான 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' இந்த சாதனையை செய்தது. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் இத்தகைய வெற்றியை மிகச் சில நாடுகளே கண்டுள்ளன. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன குழுவினரின் சராசரி வயது வெறும் 28 மட்டுமே. இது இந்திய இளைஞர்களின் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளது.

இத்தகைய சாதனையை நிகழ்த்தியது இவர்களைப் போன்ற இளைஞர்கள்தான். நான் ஏதோ ஒரு '56 வயது இளைஞரைப்' பற்றிப் பேசவில்லை” என்று கூறினார். 56 வயது இளைஞர் என ராகுல் காந்தியை பிரதமர் கிண்டல் அடித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்” - பிரதமர் மோடி நம்பிக்கை
மம்தா, உத்தவ் கட்சிகளின் பிளவால் புதுமுகம் பெறும் நாடாளுமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in