

மதுரை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இருந்தும் பராமரிப்புக் குறைபாட்டால் மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே கழிப்பறை பராமரிப்புக்கு நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி தேர்தல் வாக்குறுதிகளிலும் ‘அரசு கழிப்பறை நிரந்தர பராமரிப்பு திட்டம்’ இடம்பெற வேண்டும் என்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், தமிழகம் முழுவதுமே அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாத நிலை தொடர்கிறது. பள்ளிகளில் கழிப்பறைகளைத் தினமும் தூய்மை செய்ய நிரந்தரப் பணியாளர்கள் இல்லாததால், பல பள்ளிகளில் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அவசரத்துக்குக் கூட கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல் மாணவ, மாணவியர் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சுகாதாரமற்ற கழிப்பறைகள் காரணமாக மாணவிகள் பள்ளி நேரத்தில் தண்ணீர் குடிப்பதையே தவிர்க்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக சிறுநீர் தொற்று, சிறுநீரகம் பாதிப்பு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “வாட்டர் பெல்” என்ற திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், பல பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக இல்லாததால் மாணவிகள் அந்தத் திட்டத்தையே முழுமையாகத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் செயல்படும் நிலையில், அடிப்படை சுகாதார வசதிகளில் உள்ள குறைபாடு கல்வியின் தரத்தையும், மாணவர்களின் வருகை வீதத்தையும் பாதிக்கும் மறைமுகக் காரணிகளாக மாறி வருவதாக கல்வியியல் வட்டாரங்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றன.
குறிப்பாக பெண்கள் கல்வியைத் தொடர்வதற்கு இது ஒரு முக்கியத் தடையாகும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலரும், அரசு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான சமுத்ரா செந்தில்குமார் கூறியதாவது: மாணவர்களின் கல்வி மட்டுமின்றி அவர்களின் அடிப்படை சுகாதார உரிமையையும் பாதுகாப்பது அரசின் முதன்மைப் பொறுப்பு. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகளைப் பராமரிக்க நிரந்தர தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
பள்ளிகள் வாரியாக தினசரி சுத்தம் மற்றும் பராமரிப்பு நடைமுறைக்கு கட்டாயக் கண்காணிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, மாணவிகள் அதிகம் பயிலும் பள்ளிகளில் தனிப்பட்ட சுகாதார மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். குடிநீர், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி, சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகள் குடிநீர் குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பள்ளிகளில் கொண்டு வந்த ‘வாட்டர் பெல்’ திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த தேவையான அடிப்படை கழிப்பறை வசதிகளை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
கழிப்பறை பராமரிப்பு இல்லாததால் குடிநீர் குடித்தால் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கவலையால் அரசுப் பள்ளிகளில் மாணவிகள் குடிநீர் குடிக்கவே தயங்குகின்றனர். அதனால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘அரசுப் பள்ளி கழிப்பறை நிரந்தர பராமரிப்புத் திட்டம்’ என்ற தனித்திட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்க்க வேண்டும்,” என்று கூறினார்.