

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக் குழுவில் பெற்றோர் உட்பட 3 பேர் உறுப்பினர்களாக சேர்க்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழக சட்டப்பேரவையில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் குறித்த திருத்தச்சட்ட முன்வடிவை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணய குழுவில் பெற்றோருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக, பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து ஒரு பெற்றோரை உறுப்பினராகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், தனியார் பள்ளிகள் இயக்குநரையும், அரசு துணைச் செயலர் நிலையில் ஒரு அலுவலரையும் உறுப்பினர்களாகச் சேர்க்கவும் முன்மொழியப்ப்பட்டுள்ளது. இதுதவிர கட்டண நிர்ணயத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் 15-ல் இருந்து 30 நாட்களாக உயர்த்தப்படுகிறது.
இந்தக் குழுவால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பின்னர், பள்ளிகள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரியகாலக்கெடு முடிவதற்குள் மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். பின்னர் இதன்மீது விவாதம் நடந்தது. தி.வேல்முருகன் (தவாக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஷாநவாஸ் (விசிக), ஜி.கே.மணி (பாமக) ஆகியோர் வரேவற்று சில திருத்தங்களை கூறினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ‘‘சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை சார்ந்து பெறப்படும் புகார்கள் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் கூறுகிறோம்.
தனியார் பள்ளிகள் சார்ந்து பெற்றோர் புகார் கூறினால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்நிலையில் உள்ளோம். உறுப்பினர்களின்கருத்துகளை ஆய்வு செய்துபுதிதாகவிதிகள் மூலம் சேர்க்கநடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதைத் தொடர்ந்து சட்டமசோதா நிறைவேறியது.