

காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் கிராம மக்கள், நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்காமல், தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக் கோரி, மக்கள் நீண்ட காலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, போராட்டக் குழுவினரின் ஒருமித்த முடிவின்படி தேர்தலை புறக்கணித்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் போராட்டக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவுகள் குறித்துப் போராட்டக் குழுவின் தலைவர் க.சுப்பிரமணியன், செயலாளர் எஸ்.டி.கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்தது போலவே இந்தத் தேர்தலையும் புறக்கணிக்க முதலில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், எங்கள் போராட்டக் களத்துக்கு நேரில் வந்து, சட்டப் போராட்டங்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவி செய்து வரும் சில அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளன.
போராட்டக் குழு முன்னெடுக்கும் முயற்சிகளுக்குத் துணையாக நிற்கும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று, இந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போராட்டக் களத்துக்கு நேரில் வந்து உறுதுணையாக இருக்கும் கட்சிகளுக்கு முழுமையான ஆதரவை அளித்து வாக்களிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்கள் தேர்தலில் பங்கேற்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.